Latestமலேசியா

அதிகமானோர் மன அழுத்தம் காரணமாக Befrienders- யை அழைத்துள்ளனர்

கோத்தா கினபாலு , நவ 22 – மார்ச்சில் MCO நடமாட்டக் கட்டுப்பாட்டு  உத்தரவு அமலுக்கு வந்தது முதல்,  சபாவில்  Befrienders அமைப்பின் அழைப்புச் சேவைக்கு அதிகமானோர் அழைத்திருப்பதாக,   தற்கொலை முயற்சியைத் தடுக்க உதவும் அந்த  ஆலோசக அமைப்பு கூறியுள்ளது.

MCO கால கட்டத்தில் பெறப்பட்ட அழைப்பின் எண்ணிக்கை , கடந்தாண்டு முழுவதும் பெறப்பட்ட எண்ணிக்கைக்கு ஈடாகுமென Befrienders அமைப்பு  தெரிவித்தது.

கடந்த மார்ச் தொடங்கி அக்டோபர் வரையில், 1,375 பேர் Befrienders-சை  அழைத்திருப்பதாக, கோத்தா கினபாலு பிரிவின்  இயக்குநர் ஜெஸ்சி யோங் தெரிவித்தார். அவர்களில்,  30 விழுக்காட்டினர்  தற்கொலைக்கான எண்ணத்தைக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

அந்நிய குடியேறிகள், வீடற்றவர்கள் மத்தியில் அதிகம்  தற்கொலை சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக Befrienders அமைப்பின் தகவல் குறிப்பிடுகிறது.

இவ்வாரத்தில், சபாவில், போலீஸ் நிலையத்தின் முன் கால்வாயின் இரும்புக் குழாயில் தொங்கி ஒருவர்  தற்கொலை செய்துக் கொண்டதை ஜெஸ்சி யோங் சுட்டிக் காட்டினார்.

வாழ்வாதாரத்தை இழந்தவர்கள்,  மனநலப் பாதிப்புக்கு ஆளானவர்கள், குடும்பத் தகராறு,  கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிகமாக , Befrienders   சேவையை நாடியுள்ளனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டினால் தனிமையாக உணர்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு செயலில் ஆர்வத்தை இழந்திருப்பது,  பழக்க வழக்கத்தில் திடீர் மாற்றம் , அதிகமாக மது அருந்துவது,  தற்கொலைக்கு வித்திடக் கூடிய குறிப்பிட்ட மருந்துகள், கட்டைக் கரி,  கயிறு,  பூச்சி மருந்து முதலியவற்றை வாங்கி வைத்திருப்பது ஆகியவை, தற்கொலை முயற்சிகளுக்கான அறிகுறிகள் என  ஜெஸ்சி யோங் குறிப்பிட்டார்.

பயிற்சி பெற்ற Befrienders  தன்னார்வலர்களை 016-8036945 (WhatsApp )  என்ற எண்ணில் அழைக்கலாம்.

கோலாலம்பூரில் 03-76272929 (Kuala Lumpur) என்ற எண்ணிலும், பினாங்கில் 04-2815161  (Penang) என்ற எண்ணிலும் , ஜோகூர் பாருவில் 07-3312300 (Johor Baru ) என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!