
பெட்டாலிங் ஜெயா, பிப் 23 – பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணியில் பெர்சத்து கட்சியுடனான ஒத்துழைப்பு குறித்து முடிவெடுக்கவிருக்கும் அக்கட்சியின் பொதுப் பேரவை, அடுத்த மாதம் மார்ச் 27, 28 -ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
அந்தப் பேரவை நேரடியாகவும், இணையம் வாயிலாகவும் நடத்தப்படுமென அம்னோ தலைமைச் செயலாளர் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி 30, 31 -ஆம் தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த அம்னோ பொதுப் பேரவை, MCO – மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவையும், அவசர நிலை உத்தரவையும் அடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
பெர்சாத்து கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டு, பாஸ்- சுடனான ஒத்துழைப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் தீர்மானத்தை பொதுப் பேரவைக்கு கொண்டுச் செல்வதென, கடந்த ஜனவரி 7ஆம் தேதி அம்னோ உச்சமன்றம் முடிவெடுத்தது.
அதையடுத்து அந்த தீர்மானம் தொடர்பில் மார்ச்சில் நடைபெறும் பொதுப் பேரவையில் முடிவெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.