Latestமலேசியா

அவசரநிலையை கண்காணித்து மதிப்பீடு செய்யும் பணிக்குழுவுக்கு மூவரின் பெயர்களை சமர்ப்பிப்பீர்-எதிர்க்கட்சிக்கு அரசு வலியுறுத்து

கோலாலம்பூர். ஜன 14 – தற்போது ஆகஸ்ட் 1 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டிருக்கும் அவசர நிலையை அதற்கு முன்பாகவே முடிவுக்கு கொண்டு வருவதற்கு மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு பரிந்துரை வழங்கும் கட்சி சார்பற்ற சுயேச்சை பணிக்குழுவுக்கான மூவரின் பெயர்களை சமர்ப்பிக்கும்படி எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எழுத்துப் பூர்வமான கடிதத்தை பிரதமர் துறை அமைச்சர் தகியுடின் ஹசான் (Takiyuddin Hassan) அனுப்பியுள்ளார்.

அவசர நிலை குறித்து செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தபோது சுயேச்சை மதிப்பீட்டுக் குழு அமைக்கப்படும் என கூறியிருந்தார். எனினும் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்னும் எந்தவொரு கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகியுடினிடமிருந்து கடிதம் கிடைத்திருப்பதை பக்காத்தான் ஹராப்பான் தலைமை செயலாளர் சைபுடின் நசுட்டியோன் ( Saifuddin Nasution ) உறுதிப்படுத்தினார். பிரதமர் முஹிடின் யாசினின் பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்திற்கான ஆதரவை தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக்கொள்ளும் சாத்தியம் இருப்பதால் அந்த பணிக்குழுவில் எதிர்க்கட்சியின் சார்பில் கூடுதலான எம்.பிக்கள் இடம் பெறக்கூடும் என்றும் சைபுடின் தெரிவித்தார்.

இதனிடையே அமைச்சரவையும் மாநில நிர்வாகங்களும் தொடர்ந்து வழக்கம்போல் செயல்பட்டு வருவதால் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக சுயேச்சை பணிக்குழுவை அமைப்பது தேவையற்ற ஒன்று என பி.கே.ஆர் ( P.K.R) உதவித் தலைவர் சாங் லீ காங் ( Chang Lih Kang) கருத்துரைத்தார்.

கடந்த காலங்களில் அவசர நிலையின்போது நாட்டின் நிர்வாகத்தை தேசிய நடவடிக்கை மன்றம் எடுத்துக்கொண்டது. ஆனால் நாட்டின் நிர்வாகமும் அமைச்சரவையும் வழக்கம்போல் இப்போதும் செயல்பட்டு வருவதால் சுயேச்சை பணிக்குழுவின் செயல்பாடுதான் என்னவென்று சாங் லீ காங் கேள்வி எழுப்பினார். வெறும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு எதற்கு ஒரு சுயேச்சை பணிக்குழு என அவர் வினவினார்.

உண்மையில் இந்த ஆலோசனை குழு என்பது பெயருக்கு அல்லது அலங்கார நோக்கத்தைத்தான் கொண்டிருக்க முடியும் என்றும் அவர் விவரித்தார். உத்தேச சுயேச்சை குழு தொடர்பில் மேல் விவரங்கள் தெரியாத நிலையில் இந்த விவகாரத்தில் ஒரு நிலையை பக்காத்தான் ஹராப்பான் எடுக்க முடியாது என டி.ஏ.பியின் அமைப்புச் செயலாளரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் ( Anthony Loke தெரிவித்தார்.

அவசர நிலை பிரகடனத்தை அமனா கட்சி கடுமையாக எதிர்த்தாலும் எந்தவொரு சிறப்புக் குழுவும் நாட்டிற்கு நன்மையை தரக்கூடியதாக இருந்தால் அதில் நாங்கள் நிச்சயம் பங்கேற்போம் என அமனா கட்சியின் உதவித் தலைவரும் உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசானுடின் யூனுஸ் ( Hasanuddin Yunu) கூறினார். கட்சி சார்பற்ற கலந்துரையாடலுக்கு சிறந்த தளமாக நாடாளுமன்றம்தான் இருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!