
கோலாலம்பூர், ஜன 23- அவசர நிலையை 114 முதல் 115 பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பதால் நாடாளுமன்ற கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரான அன்வார் இப்ராஹிம் கூறினார். நாடாளுமன்றத்தை கூட்டும் தங்களின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி மாமன்னரை கேட்டுக்கொள்வதற்கும் அவசரநிலையை ரத்துச் செய்வதற்கும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்பதை இது காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேசனலின் அவசரநிலை தீர்மானத்தை எதிர்ப்பதற்கு எங்களிடம் 114 முதல் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கான தேவையைவிட இது அதிகமாகும் என அன்வார் சுட்டிக்காட்டினார். தேசிய பேராசிரியர்கள் மன்றத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
பெரிக்காத்தான் நேசனலின் கண்ணோட்டத்தை இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
அவசர நிலை பிரகடனத்தை ரத்துச்செய்வதற்காக மாமன்னருக்கு கடிதம் வாயிலாக விண்ணப்பிக்கும்படி இதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்களை அன்வார் கேட்டுக்கொண்டிருந்தார். அவசரநிலையை ரத்துச் செய்வதற்கு மாமன்னருக்கு கோரிக்கை விடுக்கும் முயற்சியையும் அம்னோ மேற்கொண்டு வந்தது.
ஆனால் கட்சி குறித்து மோசமான தோற்றம் ஏற்படும் என்பதால் அவசரநிலையை ரத்துச் செய்யக்கோரும் மகஜரில் அம்னோவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடுவதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பெரிக்காத்தான் நேசனலைச் சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர நிலையை எதிர்ப்பதால் அன்வார் பிரதமராக வருவதற்கு அவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது பொருள்படவில்லை என்றும் கூறப்படுகிறது.