Latestமலேசியா

ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பொங்கல் கொண்டு வரட்டும்;  டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன 13- ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பொங்கல் கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு பொங்கலை வரவேற்போம் என ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்,. சரவணன் தெரிவித்தார்.

பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தமிழர்களின் பண்டைய கால பழக்க வழக்கங்கள், பெருநாட்கள், விழாக்கள் அனைத்துமே வாழ்வியலோடு ஒன்றித்து இருப்பவை, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடுபவை என்பதில் ஐயமில்லை.

அந்த வரிசையில் தை மாதத்தில் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, தமிழர் திருநாளாக, இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அறுவடைத் திருநாளாகவும் அறியப்படும் தைப்பொங்கலில் விவசாயிகளின் உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், அவர்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக அமைகிறது.

“பழையன கழிதலும், புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே” – நன்னூல் நூற்பா 426
நான்கு நாள் கொண்டாடப்படும் பொங்கலில், இப்படியாக பழைய குப்பைகளை மட்டுமன்றி, பழிக்கத்தக்க குணங்களையும், செயல்களையும் நீக்கி; போற்றுதற்குரிய குணங்களையும், செயல்களையும் ஏற்போம் எனும் தத்துவத்தோடு தொடங்குகிறது “போகிப்பண்டிகை”. அடுத்து தை முதல்நாள் சூரியனுக்காக பொங்கல், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மகிழ்ச்சி பொங்க, இல்லத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம்.

காணும் பொங்கல் என்பது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு, பெரியோர் ஆசி பெறுதல் என்றாலும் இன்றைய சுகாதாரச் சூழலை மனதில் கொண்டு கொஞ்சம் விலகி நின்றே கொண்டாடுவோம்.  நமக்கு வரவில்லை என்ற அலட்சியம் வேண்டாம். கோவிட் தொற்று இருக்கும் வரை பழைய வாழ்க்கை முறை சாத்தியமல்ல. புதிய நடைமுறைகளுடன் கொரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதுதான் சிறப்பு.  தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கேற்ப கொரோனாவிற்கு தடுப்பூசி வந்துவிட்டது. கூடிய விரைவில் இந்த அனைத்துலக பரவலில் இருந்து முழுமையாக விடுபடும் நேரமும் வந்துவிட்டது.

இந்த தைத்திருநாளில் பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்க மனம் நிறைந்த வாழ்த்துகள். மகிழ்ச்சியான சூழல் நமக்காக உண்டு என்று நம்பிக்கையோடு வாழ்வோம் என டத்தோஸ்ரீ சரவணன் தமது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!