இத்தாலி காற்பந்து நட்சத்திரம் பவ்லோ ரோஸி காலமானார்

ரோம், டிச 10 – இத்தாலியின் பிரபல காற்பந்து நட்சத்திரம் பவ்லோ ரோஸி தமது 64ஆவது வயதில் இன்று காலாமானார். 1982ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் இத்தாலி வெற்றியாளராக வாகைசூடுவதற்கு முக்கிய பங்காற்றியவர் பவ்லோ ரோஸியாவார்.
ஜூவன்டஸ் கிளப்பில் நான்கு ஆண்டு காலம் விளையாடியுள்ள ரோஸி இரு இத்தாலிய கிண்ணம், ஐரோப்பிய கிண்ணம் மற்றும் கோப்பா இத்தாலிய காற்பந்து போட்டியிலும் வெற்றிக் கிண்ணத்தை வாகை சூடுவதற்கு அளப்பரிய பங்கை ஆற்றியுள்ளார்.
1982ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் இரண்டாவது சுற்றில் பிரெசிலுக்கு எதிராக மூன்று வெற்றி கோல்களை அடித்த பவ்லோ ரோஸி அரையிறுதி ஆட்டத்தில் போலாந்து குழுவுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்து இத்தாலியை இறுதியாட்டத்திற்கு தேர்வு பெறச் செய்தார்.
ஜெர்மனி குழுவுக்கு எதிரான பரபரப்பான இறுதியாட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அந்த அணி உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கியமான கோலையும் பவ்லோ ரோசி அடித்தார். அந்த போட்டியில் 6 வெற்றி கோல்களை அடித்தற்காக தங்கக் காலணி மற்றும் சிறந்த ஆட்டக்காருக்கான விருதையும் பவ்லோ ரோஸி வென்றார்.