Latestசினிமா

இந்தியன் 2 கைவிடப்பட்டதா ? – இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கம்

தமிழ்நாடு, பிப் 16 – பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் நிச்சயம் மீண்டும் தொடங்கப்படும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளை இந்த படம் சந்தித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியன் முதலாம் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 24 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் இயக்குனர் ஷங்கர் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பல்வேறு முன்னணி நடிகர்கள், ரவிவர்மனின் ஒளிப்பதிவும் அனிருத் இசை என்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கிய சில நாட்களிலேயே இந்தியன் தாத்தா வேடத்திற்கு கமல்ஹாசனுக்கு போடப்பட்ட ஒப்பனை சரியாக பொருந்தவில்லை என்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, வேறு ஒரு குழுவை மாற்றி படப்பிடிப்பை மே மாதத்தில் தொடங்கினர். தொடர்ந்து ராஜமுந்திரி உள்ளிட்ட சில இடங்களில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கமல்ஹாசனுக்கு கால் அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் அவர் இல்லாத சில காட்சிகளை மட்டும் இயக்குனர் ஷங்கர் படமாக்கினார்.

2019-இல் இ.வி.பி ஃபிலிம் சிட்டியில் (EVP Film City) இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தான் விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். அதன் பிறகு சில மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று நினைத்த நிலையில்தான் ஷங்கருக்கும் லைகா (LYCA) நிறுவனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால்தான் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்குவதற்கான தொகையை வழங்க வேண்டும் என்று ஷங்கர் தரப்பிலாருந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஏற்கனவே 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டு விட்டதால் இனி படத்தின் வெளியீடு வரை எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்து அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டால் மட்டுமே மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவது என்பதில் லைகா நிறுவனம் உறுதியாக இருந்திருக்கிறது.

இதற்கிடையே, கமல்ஹாசன் விக்ரம் படத்தின் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் பொறுமை இழந்த இயக்குனர் ஷங்கரும் வேறு படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் மும்முரம் காட்டினார். அதன் தொடர்ச்சியாகவே ராம்சரண் நடிப்பில் அவர் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதனால் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவ, அதனை மறுத்திருக்கும் ஷங்கர் தரப்பு, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று விளக்கம் அளித்திருக்கிறது. அதற்கு முன்பு விக்ரம் படத்தை முடித்து விடுவதாக கமல்ஹாசனும் உறுதியளித்திருக்கிறாராம். அதனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நடத்தி முடித்து அடுத்தாண்டு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!