
பத்து பஹாட். நவ 21 – .இந்தியாவில் பருவ மழை மற்றும் வெள்ளத்தினால் அந்நாட்டிலிருந்து வெங்காய இறக்குமதி குறைந்துள்ளதால் அதன் விலை ஏற்றத்தை தவிர்க்க முடியாது என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறியுள்ளது. எனவே தாய்லாந்து, பாகிஸ்தான், சீனா, நெதர்லாந்து , மியன்மார் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை வாங்குவதற்கு மக்கள் முன்வர வேண்டும் என உள்நாட்டு , வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார துணையமைச்சர் டத்தே ரோசோல் வாஹிட் கேட்டுக்கொண்டார்.
தற்போது இந்திய வெங்காயத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. ஆனால், இதர நாடுகளிலிருந்து கிடைக்கும் வெங்காயங்கள் போதுமானதாக இருப்பதோடு பழைய விலையிலேயே விற்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும் இதர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தைவிட இந்திய வெங்காயத்தை வாங்குவதைத்தான் உள்நாட்டு பயனீட்டாளர்கள் விரும்புகின்றனர். இன்று யொங் பெங்கில் தியோ செங் கெப்பிட்டல் பெர்ஹாட் முட்டை நிறுவனத்தை தொடக்கி வைத்த பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரோசோல் இதனை தெரிவித்தார்.
அதே வேளையில் நாட்டிலுள்ள பயனீட்டாளர்களின் தேவையை சமாளிப்பதற்காக வெங்காயத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளிடமிருந்து வெங்காய இறக்குமதிக்கான இதர வளங்களை அரசாங்கம் ஆராயும் என்றும் அவர் சொன்னார். இதனிடையே நாட்டில் உணவுப் பொருட்களின் வினியோகம் போதுமான அளவில் இருப்பதாகவும் ரோசோல் உறுதியளித்தார். வழக்கமான அனுமதி அளவைவிட 30 விழுக்காடு கூடுதலாக மொத்த விற்பனையாளர்கள் உணவுப் பொருட்களின் கையிருப்பை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதகாவும் அவர் சொன்னார்.
நாட்டில் மழைக் காலம் இப்போது தொடங்கியுள்ளது.
எனவே வெள்ளம் ஏற்படும்போது உணவுப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்படும் என எவரும் கவலை அடைய வேண்டியதில்லை என்றும் ரோசோல் தெரிவித்தார். பல மாநிலங்களில் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பதப்பட்டிருந்தாலும் உணவுப் பொருட்களின் வினியோகம் போதுமான அளவில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.