
கோலாலம்பூர், ஆக 12 – பாலர் பள்ளி ஆசிரியை திருமதி இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முகமட் ரிடுவான் அப்துல்லா இந்நாட்டில் இல்லையென உள்துறை அமைச்சு நம்புவதாக அதன் அமைச்சர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார். திருமதி இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரசன்னா டிக்சாவை அவரது தாயாரிடம் ஒப்படைக்கும்படி 2016ஆம் ஆண்டில் கூட்டரசு நீதிமன்றம் உத்ரவு பிறப்பித்த போதிலும் இதுவரை முகமட் ரிடுவான் இன்னும் அக்குழந்தையை ஒப்படைக்கவில்லை.
இப்போதைக்கு முகமட் ரிடுவான் வெளிநாட்டில் ஒரு இடத்தில் நிரந்திரமாக குடியிருக்கவில்லை என போலீஸ் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவருகிறது. அதோடு பிடிபடாமல் இருப்பதாற்காக முகமட் ரிடுவான் அப்துல்லா தாம் தங்கியிருக்கும் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதாக நம்பப்படுவதாக ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.
தேசிய பதிவுத்துறையில் முகமட் ரிடுவான் வழங்கியிருந்த முகவரியைக் கொண்ட இடத்திற்கு அரச மலேசிய போலீஸ் படை உறுப்பினர்கள் சென்று பாரத்தபோது அங்கு அவர் குடியிருக்கவில்லை என்பதையும் ஹம்சா ஜைனுடின் சுட்டிக்காட்டினார்.
அதோடு குடிநுழைவுத்துறையின் பதிவுகளிலும் முகமட் ரிடுவான் அப்துல்லாவின் பெயர் கருப்புப் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவர் நாட்டிலிருந்து வெளியேற முயன்றால் அதனை கண்டறிந்து கைது செய்யும்படி பணிக்கப்பட்டிருப்பதாக வங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் யூ கியு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது ஹம்சா ஜைனுடின் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது அரச மலேசிய போலீஸ் படை மேற்கொண்ட விசாரணையின் மூலம் முகமட் ரிடுவான் மலேசியாவில் இல்லையென தெரியவருகிறது. அவர் ஒரு இடத்தில் இல்லையென்றும் தம்மை எவரும் கண்டுப்பிடிக்காமல் இருப்பதற்காக அவர் அடிக்கடி ஒரு இடத்திலிந்து மற்றொரு இடத்திற்கு மாறிச் செல்கிறார் என்றும் அமைச்சர் கூறினார்.