Latestஇந்தியா

இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தைப்பூச விடுமுறை; முதலமைச்சர் அறிவித்தார்

சென்னை, ஜன 5 – ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடங்கி இனிவரும் ஆண்டுகளிலுல் தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்ப்பதற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படும் முக்கிய விழாவாக தைப்பூசம் திகழ்கிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஏற்கனவே தமிழகம் மற்றும் கேராளாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதுதவிர மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிஷியஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மலேசியா , இலங்கை, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படுவதால் தமிழகத்திலும் தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை வழங்க வேண்டும் என பல்வேறு மாவட்டங்களில் தாம் சுற்றுப்பயணம் செய்தபோது பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால் இதனை பரிசீலித்து முதல் முறையாக இம்மாதம் 28ஆம் தேதி தைப்பூச திருவிழாவுக்கு தமிழகத்தில் விடுமுறை வழங்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கான பொது விடுமுறை பட்டியலில் தைப்பூச திருவிழாவும் இடம்பெற்றிருக்கும் என அவர் சொன்னார்.

இதனிடையே தைப்பூச திருநாளை அரசின் பொது விடுமுறையாக அறிவித்த முதல்வருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். தைப்பூசத்திற்கு தமிழக அரசு பொது விடுமுறை வழங்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து தமிழர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!