Latestஇந்தியா

இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போகிறாரா கமல்ஹாசன் ?

சென்னை, பிப் 23 – மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவிருக்கின்ற தமிழக தேர்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி தொடங்கி முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதால் கமல்ஹாசன் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் முதன்முதலில் கடந்த நாடாளுமன்ற தேர்தலைச் சந்தித்து 3.73 விழுக்காடு வாக்குகளை பெற்றது. ஆனால் அத்தேர்தலில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னையில் வேளச்சேரி மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலும், கோவை மதுரைக்கு உட்பட்ட ஏதேனும் தொகுதியிலும் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையை பொருத்தவரை வேளச்சேரி மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளிலும் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவை. இந்த தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1,35,465 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை மக்கள் நீதி மையம் பெற்றது. உட்கட்டமைப்பு சரிவர இல்லாத நிலைமையிலேயே 12.03% வாக்குகளை இங்கு அக்கட்சி பெற்றிருந்தது. இதனால் வேளச்சேரி அல்லது மயிலாப்பூர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட்டால் நிச்சயமாக வெற்றி அடைய முடியும் என்று கமல்ஹாசனிடம் தெரிவிக்கப்பட்டு அதற்கான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.

அதோடு, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியிலும் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்தத் தொகுதி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டு வருகிறது. இதிலும் 1,35,525 வாக்குகளைப்பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்தது. அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர் முதன்முதலில் போட்டியிட்ட பரங்கிமலை தொகுதி தற்போது ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு வருகிறது.

சென்னைக்கு உட்பட்ட ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருக்கும் கமல்ஹாசன் கோவை மதுரை மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தான் கடந்த முறை போட்டியிட்டார். அதோடு அங்குதான் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1,45,104 வாக்குகளை மக்கள் நீதி மையம் பதிவு செய்தது ஆகையால் கமல்ஹாசன் போட்டியிடும் மற்றுமொரு தொகுதி கோவைக்கு உட்பட்டதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!