Latestமலேசியா

இ .பி. எப் சந்தா தொகையை மீட்பதை தவிர்ப்பிர்-பி.ப.ச ஆலோசனை

கோலாலம்பூர். நவ 12- இ.பி.எப் எனப்படும் சேமநிதி உறுப்பினர்கள் தங்களுடைய கணக்கிலுள்ள சேமநிதித் தொகையை எடுக்க சேமநிதி வாரியம் வழங்கியுள்ள அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக்கொண்டார். தங்களுடைய ஓய்வுக் காலத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையை இப்பொழுதே சேமநிதி உறுப்பினர்கள் எடுத்துவிட அனுமதி வழங்கக்கூடாது என்ற எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றார் முகிதீன்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஊழியர் சேமநிதியின் முதலாவது கணக்கிலிருந்து மாதத்திற்கு 500 ரிங்கிட் என 12 மாதங்களுக்கு 6,000 ரிங்கிட் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்து. கோவிட் பெருந்தொற்றின் காரணமாக தங்களுடைய வேலையை இழந்தவர்களுக்கு உதவி செய்வதே இதன் நோக்கமாகும்.

மக்களை சேமநிதித் தொகையை எடுத்து செலவு செய்வதற்கு ஊக்குவிப்பதற்குப் பதிலாக வேலை இழந்தவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு பொருளாதாரத் முனைப்புத் தொகுப்பினை அரசாங்கம் அளிக்க வேண்டும். ஏனெனில் 14.59 மில்லியன் சேமநிதி உறுப்பினர்களில், 32 விழுக்காட்டினருக்கு (4.7 மில்லியன் பேர்) தங்களுடைய சேமநிதிக் கணக்கில் 1,000 ரிங்கிட்மட்டுமே எஞ்சியிருக்கிறது. 10 விழுக்காட்டினருக்கு (1.5 மில்லியன் பேர்) சேமநிதி கணக்கு 1-ல் 5000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறையான தொகையே வைத்திருக்கின்றனர்.

சுமார் 62 லட்சம் (42%) சேமநிதி உறுப்பினர்கள் பணம் எடுப்பதற்கு அவர்களுடைய சேமநிதிக் கணக்கில் 6,000 ரிங்கிட் கூட வைத்திருக்கவில்லை. பெருந்தொற்று முடிவுக்கு வந்த பிறகு ஒருவர் வேலைக்குச் சேர்ந்து 60 வயதில் வேலை ஓய்வு பெற்று 76 வயதில் இறந்து போகிறார் (மலேசியர்களின் சராசரி வாழ்நாள்) என்று வைத்துக்கொண்டால் அவர் பத்து வருடத்திற்கும் மேலாக கையில் பணமில்லாமல் இருப்பார் என்று அர்த்தம்.

உறுப்பினர்கள் தங்களுடைய சேமநிதித் தொகையில் கை வைப்பதை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எதிர்க்கிறது. சேமநிதி சட்டம் 1991-ன் பிரிவு 27-ன் படி சேமநிதி உறுப்பினர்களுக்கு அவர்களுடயை சேமநிதி சேமிப்புத் தொகைக்கு வருடத்திற்கு 2.5 விழுக்காடு வட்டி கொடுத்தாக வேண்டும். 2019-ல் சேமநிதி வாரியம் வழக்கமான சேமிப்புக்கு 5.45% ஈவுத்தொகையும் (dividend) இஸ்லாமிய ஷரியா சேமிப்புக்கு 5.0% ஈவுத்தொகையும் கொடுப்பதாக அறிவித்தது. ஆகையால் உறுப்பினர்கள் தங்களுடைய பணத்தை எடுக்கும் பட்சத்தில் இந்த ஈவுத்தொகையை இழக்க நேரிடும். அதோடு ஓய்வுக் காலத்திற்காக உள்ள பணத்தையும் இழக்க நேரிடும் என முகைதீன் அப்துல் காதர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!