
கோலாலம்பூர், நவ 26 – கடந்த 2016- ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் மாதம் வரையில், ஊழல் , அதிகார முறைகேடு , நிதி மோசடி ஆகிய புகார்கள் தொடர்பில், அரசாங்க ஊழியர்கள் மீது , மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 2, 287 விசாரணை அறிக்கைகளைத் திறந்திருக்கிறது.
பிரதமர் துறை அமைச்சர் தகியூடின் ஹசான் மக்களவையில் இந்த விபரத்தை வெளியிட்டார்.பொதுச் சேவைத் துறையில், ஊழலைத் துடைத்தொழித்து, ஊழியர்கள் உயர்நெறியுடன் பணியாற்றுவதை உறுதிச் செய்யும் கடப்பாட்டினை அரசாங்கம் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
அதன் தொடர்பில், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊழல் நடைபெற வழிவகுக்கக் கூடிய பலவீனங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யும் நிர்வாக முறை, ஊழல் எதிர்ப்பு திட்டம் போன்றவற்றைக் கொண்டு , பொதுச் சேவை துறை உயர்நெறியுடன் இருப்பது உறுதிச் செய்யப்பட்டு வருவதாக தகியூடின் ஹசான் கூறினார்.
மேலும் , ஊழலைத் துடைத்தொழிப்பது தொடர்பான பாடத் திட்டம், பல்கலைக்கழக போதனையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதையும், அவர் சுட்டிக் காட்டினார்.