எங்களுக்கும் குடும்பம் உள்ளது ; கோவிட்-19 அறிகுறிகளை மருத்துவர்களிடம் மறைக்காதீர்!

பெட்டாலிங் ஜெயா, டிச 27 – கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் , அதை மருத்துவ பணியாளர்களிடம் மறைக்காதீர்கள்!
வைரஸ் தொற்றிலிருந்து மருத்துவ பணியாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த தகவல் மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் அவர்களை நம்பி குடும்பத்தினர் உள்ளனர் என உணர்ந்து பொது மக்கள் நடந்துக் கொள்ள வேண்டுமென சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
உடல் நல பாதிப்புகள் இருந்தும் அதை நோயாளி ஒருவர் மறைத்தது தொடர்பில், மருத்துவர் பதிவிட்டிருந்ததை சுட்டிக் காட்டி, டாக்டர் நோர் ஹிஷாம் அந்த அறிவுறுத்தலை முன் வைத்தார்.
பாதிக்கப்பட்ட மருத்துவர் , டிசம்பர் 23 ஆம் தேதி நோயாளி ஒருவர் , மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்வதற்காக வந்திருந்தார் எனவும், அவரது உடல் தட்ப வெப்ப நிலை வழக்கமான அளவிலே பதிவாகியிருந்ததாக எனவும் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்கேன் செய்த போது, அந்த நோயாளியின் நுரையீரலில் தொற்று இருந்தது. அந்த நோயாளியை மீண்டும் வலியுறுத்தி கேட்டபோது, தனக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாகவும் இருமல் இருந்ததாகவும் ஒப்புக் கொண்டார்.
அந்த நோயாளிக்குப் பின்னர் கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட சம்பந்தப்பட்ட பெண் மருத்துவருக்கும் கோவிட் 19 தொற்று கண்டிருப்பது தெரிய வந்தது.
அதனால் தனது குடும்பத்தினருக்கும் அந்த வைரஸ் தொற்றியிருக்கலாமென என தாம் அஞ்சுவதாக அந்த மருத்துவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.