
பெய்ஜிங், ஜன 14 – இந்த எட்டு மாத காலத்தில் கோவிட் -19 தொற்றால் சீனா, முதல் உயிரிழப்பை பதிவு செய்திருக்கின்றது. கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு சீனா அந்நாட்டில் கோவிட் -19 தொற்றை பேரளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. வியாழக்கிழமை அந்நாட்டில் புதிதாக 138 கோவிட் 19 தொற்றுகள் பதிவாகின.
கடந்த வாரம், ஹெபய் (Hebei ) மாநிலத்தின் ஷிஜியாஜுவாங் (Shijiazhuang ) நகரில் , அதிகாரத்துவ தரப்பினர், போக்குவரத்து சேவைகளை நிறுத்தியதோடு, பள்ளிகளையும் கடைகளையும் மூடினர். அந்நகரில் மக்கள் பேரளவில் கோவிட் -19 மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
அதன் அண்டை நகரான, 70 லட்சம் மக்கட் தொகையைக் கொண்ட ஜிங்டாய் (Xingtai ) பகுதியிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டது.
மற்றொரு மாநிலமான ஹைலோங்ஜியாங் -கில் (Heilongjiang ) அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
சீனாவில் இதுவரை அந்த பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4, 635 ஆக பதிவாகியுள்ளது.