Latestஉலகம்

ஒரே நிமிடத்தில் கோவிட் தொற்றைக் கண்டு பிடிக்கும் பரிசோதனை முறை!

சிங்கப்பூர், அக் 23 – சுவாசப் பரிசோதனையின் மூலம் கோவிட்-19 நோய்க்கிருமி பீடித்திருப்பதை அடையாளம் காணும் முறையை, சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

180 நோயாளிகள் மீது அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 90 விழுக்காட்டினருக்கு முடிவுகள் மிகச் சரியாகக் காண்பிக்கப்பட்டிருப்பதாக NUS எனும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஒருவருக்கு அந்நோய்க்கிருமி பீடித்துள்ளதா என்பதைக் கண்டறிய, சம்பந்தப்பட்ட நபர், சோதனைக் கருவியில் பொறுத்தப்பட்டுள்ள குழாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியாக்க வேண்டும்.

அவரது அம்மூச்சுக் காற்று ஸ்பெக்ட்ரோமீட்டர் (spectrometer) எனும் சாதனத்தில் சேகரிக்கப்பட்டு, அளவிடப்படும். பின்னர் பல்வேறு மென்பொருட்களைக் கொண்ட இயந்திரம், மூச்சுக்காற்றில் உள்ள கரிமச் சேர்மங்களை ஆய்வுச் செய்து, ஒரே நிமிடத்தில் அவருக்கு கோவிட்-19 நோய்க்கிருமி பீடித்துள்ளதா இல்லையா என்பதைக் காட்டிவிடும் என அப்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

கோவிட்-19 தொற்றை மிகத் துல்லியமாகவும் விரைவாகவும் கண்டுபிடிக்க உதவும் இத்தொழில்நுட்பத்தைப் பிரித்தோனிக்ஸ் (Breathonix ) எனும் நிறுவனம் மேம்படுத்தியிருக்கின்றது.

இத்தொழில்நுட்பத்திற்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரம், மூச்சை வெளியிடும் போது ஒருவரது உமிழ்நீர் உள்ளே புகுந்து விடாதபடி தடுக்கக்கூடிய தன்மையையும் கொண்டிருப்பதாகப் பிரித்தோனிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டாக்டர் ஜியா ஸூனான் (Jia Zhunan) தெரிவித்தார்.

அதோடு ஒவ்வொருவருக்கும் இருக்கும் நோய்களின் தன்மைக்கு ஏற்ப, மனித அணுக்களின் உயிரியல் இரசாயன மாற்றங்கள் அமைந்திருக்கும் என்பதால் இப்பரிசோதனை வழி, ஒருவருக்குக் கோவிட்-19 நோய்க்கிருமி பீடித்துள்ளதா என்பதை மிக எளிதாக அறிந்து விட முடியும் என அவர் மேலும் விளக்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!