
கோத்தா திங்கி, செப் 1 – ஒன்று அல்லது இரண்டு வயதுடைய யானைக் குட்டி காரினால் மோதப்பட்டதால் பரிதாபமாக மாண்டது. ஜாலான் கோத்தா திங்கி – மெர்சிங் 10ஆவது மைலில் நிகழ்ந்த விபத்தில் அந்த யானைக் குட்டி மடிந்தது.
300 கிலோ எடையைக் கொண்ட அந்த யானைக் குட்டி சம்பந்தப்பட்ட விபத்து இன்று காலை மணி 7,45 அளவில் நிகழ்ந்ததாக ஜோகூர் பாதுகாக்கப்பட்ட வன விலங்கு, பூங்காத்துறையின் இயக்குனர் சல்மான் ஷாபான் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அதிகாரிகள் குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. சாலையோரத்தில் குட்டி யானையின் உடல் கிடந்ததாக அவர் சொன்னார். விடியற்காலை நிகழ்ந்த அவ்விபத்தில் கோத்தா திங்கியிலிருந்து ஆடவர் ஒருவர் ஓட்டிவந்த புரோட்டோன் பெசோனா கார் அந்த யானைக்குட்டியை மோதியதாக சல்மான் ஷாபான் கூறினார்.
அந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு மூன்று யானைகள் நடமாடிக்கொண்டிருந்ததையும் காணமுடிந்ததாக சல்மான் ஷாபான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இதனிடையே விபத்தில் இறந்த யானைக்குட்டியை தாய் யானை எழுப்ப முயன்ற பரிதாப காட்சியைக் கொண்ட 39 வினாடிகளைக் கொண்ட காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலானது