
கோத்தா பாரு, அக் 1 – கிளந்தானில் புதிதாக கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் இருவரில் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் அடங்கும்.
மற்றொருவர் 25 வயது இளைஞர். கோவிட்-19 நோய்க்கு ஆளாகியிருந்த தமது அண்ணனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், அவரது தம்பியான அந்த இளைஞருக்கும் அந்நோய்க்கிருமி பரவியிருக்கிறது. அதோடு அவ்வாடவரின் உறவுக்கார குழந்தையான அந்த ஒன்றரை வயது சிசுவுக்கும் நோய்க்கிருமி பீடித்ததாக கிளந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டத்தோ டாக்டர் ஸாய்னி உசேன் (Datuk Dr Zaini Hussin) தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை சபாவில் இருந்து அண்மையில் கிளந்தான் திரும்பியிருக்கின்றார். கடந்த திங்கட்கிழமையன்று அவருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
நோய்த்தொற்று ஏற்பட்ட குழந்தை தற்போது ராஜா பெரெம்புவான் ஸைனாப் 2 (Raja Perempuan Zainab II) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், குழந்தையின் உறவினரான இளைஞர், தும்பாட் (Tumpat) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.