Latestமலேசியா

கோங் ஆற்று நீர் மாசடைந்த விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்ட ஐவருக்கு ஜாமீன் அனுமதி!

ஷா ஆலாம், செப் 22 – சுங்கை கோங் (Sungai Gong) ஆற்றில் கழிவுகளைக் கொட்டி, ஆற்று நீர் மாசடையக் காரணமாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப் பட்டிருக்கும் ஐவர், உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
கழிவுகளை ஆற்றில் கொட்டிய தொழிற்சாலையின் இயக்குனர் வாரிய உறுப்பினர்களான 4 சகோதரர்களையும், தொழிற்சாலையின் நிர்வாகி ஒருவரையும், தலா 4 லட்சம் ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் விடுவிக்க, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பிணையில் விடுவிக்க அனுமதி மறுத்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி, அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களின் அவ்விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவர்களை உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க அனுமதி வழங்கியுள்ளது. அதோடு, சம்பந்தப்பட்ட ஐவரும், தங்களின் கடப்பிதழ்களை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிணையில் இருக்கும் கால கட்டத்தில் அவர்கள் தவறுகள் ஏதேனும் செய்தால், அந்த ஐவரின் ஜாமீன் அனுமதி மீட்டுக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியம், அவர்கள் புரிந்த குற்றத்தின் தன்மை, இதே தவற்றை அவர்கள் மீண்டும் செய்யும்போது ஏற்படக்கூடிய ஆபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவருக்கும் உயரிய உத்தரவாதத் தொகையாக, 4 லட்சம் ரிங்கிட்டை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இம்மாத தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் தொழிற்சாலையின் கழிவுகள் ஆற்றில் கலக்கப் பட்டதால், ஆற்று நீர் மாசடைந்து, நான்கு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டன. அதனால் ஏறக்குறைய 1,300 இடங்களில் அட்டவணையிடப்படாத தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானது நினைவிருக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!