
புத்ரா ஜெயா, டிச – கோவிட் -19 தொற்றின் மூன்றாவது அலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்த உயிர்கொல்லிக்கு 1,141 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் மூவர் மட்டுமே வெளிநாட்டில் இந்த தொற்றுக்கு உள்ளாகினர். எஞ்சிய 1,138பேர் உள்நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். இந்த தொற்றினால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயிரிழப்புகள் பதிவாகி வந்தன. நேற்று அதிக அளவில் 11 பேர் மரணம் அடைந்த வேளையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் முறையாக உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. நாட்டில் கோவிட் தொற்று தொடங்கியது முதல் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு 376 ஆக பதிவாகியுள்ளது. அதோடு தொற்றுக்குள்ளானவர்களில் மொத்த எண்ணிக்கை தற்போது 70,236 ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூர் மற்றும் சபாவில் தொடர்ந்து அதிகமானோர் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். சிலாங்கூரிலும் சபாவிலும் தலா 320 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகினர். இதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூரில் 256 பேரும், ஜோகூரில் 69 பேரும், பினாங்கில் 48 பேரும் பேரும் , பேராவில் 47 பேரும், நெகிரி செம்பிலானில் 15பேரும் தொற்றுக்குள்ளானதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அல்துல்லா கூறினார்.
கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கையும் 1,144ஆக அதிகரித்திருப்பது மகிழச்சியை அளிப்பதாக உள்ளது. இதுவரை 59,061பேர் குணமடைந்துள்ளனர்.
எனினும் இன்னமும் 10,799 பேர் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 129 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 53பேருக்கு செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.