Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வீர் முஹிடின் – அறைகூவல்

கோலாலம்பூர், செப் 15- கோவிட் -19 தொற்று பரவலை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் மலேசியர்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் கேட்டுக்கொண்டார். அதோடு முகக் கவசங்களை அணியும் விவகாரத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. முகக் கவசம் அணிய வேண்டும் என்ற புதிய வழக்கத்தை மக்கள் தொடர வேண்டும் என்பதோடு, தனி மனித சுகாதாரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளையம் பின்பற்றி வர வேண்டும்.
கோவிட் தொற்றை முற்றாக துடைத்தொழிக்கும் நடவடிக்கைகளில் அனைத்து மலேசியர்களும் விவேகமான முறையில் பங்காற்ற வேண்டிய அவசியம் இருப்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் கோவிட் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கெடாவில் கோத்தா ஸ்டார், சபாவில் லாஹட் டத்து, தாவாவ் ஆகிய மூன்று மாவட்டங்கள் அபாயகரமான பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் தொற்று பரவுவதை தடுப்பதில் நாடு வெற்றி கண்டிருந்தாலும் அண்மைய காலகமாக கோவிட் தொற்று அதிகரித்து வருவது குறித்தும் தாம் கவலையடைவதாக இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக ஆற்றிய உரையில் முஹிடின் தெரிவித்தார். கடந்த 14 நாட்களில் புதிதாக 615பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுதவிர வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் இந்த தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே எல்லைகளை திறக்கும் விவகாரத்தில் அரசாங்கம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியிருப்பதாகவும் முஹிடின் தெரிவித்தார்.
இதனிடையே சபா தேர்தலில் வாக்காளர்கள் நெருக்கமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வாக்காளர்களிடம் வேட்பாளர்கள் கைகுலுக்க முடியாது. இதனை வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் முஹிடின் வலியுறுத்தினார்.
கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் முன்புபோல் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த வேண்டியிருக்கும் . இப்படியொரு சூழ்நிலை ஏற்பாட்டால் அது மக்களுக்கு பல்வேறு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதோடு நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நாட்டு மக்கள் அனைவரும் கோவிட் தொற்று விவகாரத்தில் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!