Latestமலேசியா

கோவிட் தொற்று உயிரிழந்தவர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ஆவது இடம்

லண்டன் , ஆக 1 – உலகம் முழுவதிலும் கோவிட்-19 தொற்று தொடர்ந்து பெரிய மிரட்டலை ஏற்படுத்தி வருகிறது. இன்னும் மருந்து கண்டுப்பிடிக்காத இந்த தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதிலும் 682,999 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹன் நகரில் பரவிய இந்த கோவிட்-19 தொற்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெய்ன் , பிரிட்டன் போன்ற நாடுகளிலும் அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளையும் புரட்டிப் போட்ட பின்னர் இப்போது இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கோவிட் தொற்றுக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தினசரி இந்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்திய அரசாங்கத்திற்கும் அந்நாட்டின் மருத்துவ நிபுணர்கள் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா முழுவதிலும் கோவிட் தொற்றுக்கு 16 லட்சத்து 97,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 57,118 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி 764 பேர் மரணம் அடைந்தனர். அதோடு இந்த தொற்றின் பாதிப்பினால் இந்தியாவில் இதுவரை 36,551 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 10 லட்சத்து 95,647 பேர் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியாகியுள்ளனர். தற்போது 5 லட்சத்து 64,856 பேர் இந்த நோயின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 8,000த்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று காலை நிலவரப்படி 14 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில்தான் மோசமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகினர். 84,000த்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 12,000த்திற்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே அமரிக்காவில் இதுவரை மாண்டவர்களின் எண்ணிக்கை 156,747 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர அந்நாட்டில் இன்னும் 18,000த்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். மொத்தம் 92,568 கோவிட் மரணங்களை பதிவு செய்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!