Latestமலேசியா

கோவிட்-19 கொள்ளை நோயின் குறையாத சீற்றம்; எழுவரின் உயிரைப் பலி வாங்கியது, 871 பேர் பாதிப்பு!

புத்ராஜெயா, அக் 18 – நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றின் சீற்றம் இன்னும் குறைந்தபாடில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் புதிதாக அந்நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு கோவிட்-19 பரவலுக்கு ஆளாகத் தொடங்கியது முதல் மிக அதிகமானோர் அந்நோய்க்கிருமியில் பாதிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதன் முறை.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பவங்களில் 866, உள்ளூரில் பதிவானவை. ஐவர், வெளிநாடுகளில் இருந்த போது நோய்ப் பரவலுக்கு ஆளானவர்கள் ஆவர்.

இப்புதிய சம்பவங்களை அடுத்து, நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,498ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் எழுவர் அந்நோய்க்கிருமிக்குப் பலியாகியிருக்கின்றனர். இதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கையும் 187ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்று 869 பேர் நோய்ப்பரவலுக்கு ஆளாகியிருந்த வேளையில் இன்றைய எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருப்பது அனைவருக்கும் கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நோய்த் தாக்கம் குறையாதா என தினந்தோறும் ஏங்கி வரும் மக்களுக்கு, இத்தகவல்கள் பெரும் ஏமாற்றத்தையே தந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட சம்பவங்களில் 11 விழுக்காடு, தெம்போக் (Tembok), ரெமான் (Reman) சிறை, செபெரங் பிறை (Seberang Perai) சிறை, கெபாயான் (Kepayang) சிறை ஆகிய தொற்று மையங்களுடன் தொடர்புடையவை என டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 86 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வரும் நிலையில் 28 பேர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 13,262 பேர் அந்நோய்க்கிருமியிலிருந்து பூரண குணமடைந்திருப்பதாகவும் டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!