
புத்ராஜெயா, பிப் 23 – கோவிட் தடுப்பூசி போடும் மையத்தில், தடுப்பு மருந்து போட்டுக் கொள்வதற்கு முன்பாக ஒருவர் ஐந்து நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும்.
அந்த நடைமுறைகள் முழுமைப் பெற 15 –லிருந்து 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளுமென சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
முதல் நிலையில் ஒருவரின் தட்ப வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். அவருக்கு உடல் நலப் பாதிப்புக்கான அறிகுறிகள் உள்ளதா என்பது கண்டறியப்படும்.
இரண்டாம் நிலையில், பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மூன்றாம் நிலையில், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான அனுமதி பெறப்படும்.
நான்காம் நிலையில் ஒருவருக்கு கோவிட் தடுப்பூசி போடப்படும்.
ஐந்தாம் நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் உடல் நிலை கண்காணிக்கப்படும்.
புத்ராஜெயாவில், தடுப்பூசி நடவடிக்கைக்கான ஒத்திகையைப் பார்வையிட்டப் பின்னர், டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா செய்தியாளர்களிடம் இவ்விபரங்களை வெளியிட்டார்.
நாளை முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் 19 தடுப்பு மருந்து போடும் நடவடிக்கைகள் தடங்குகின்றன.
கோவிட் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 532 கோவிட் தடுப்பூசி போடும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில், நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆகியோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்படாது என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.