
புத்ரா ஜெயா, நவ 21 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,041பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகினர். சபாவை மிஞ்சும் அளவுக்கு சிலாங்கூரில் 402 பேர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இம்மாநிலத்தில் தெரத்தாய் தொற்று மையத்தினால் 298 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்த நிலையில் சபாவில் 346 பேரும், நெகிரி செம்பிலானில் 121 பேரும், கோலாலம்பூரில் 68 பேரும் , ஜோகூரில் 33 பேரும் புதிதாக தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகினர் என சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். நாட்டில் இதுவரை 53,679 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த தொற்றினால் இன்று சபாவில் மூவர் உயிரிழந்தனர். 62 மற்றும் 78 வயதுடைய இரண்டு ஆடவர்களுடன் 55 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவரும் மரணம் அடைந்தார். இம்மூவரும் ஏற்கனவே கடுமையாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களாவர். நாட்டில் கோவிட் தொற்று பரவியது முதல் அதன் பாதிப்புக்குள்ளாகி மாண்டவர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இன்னமும் 12,854 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 45 பேருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஜோகூர், லபுவான் மற்றும் சிலாங்கூரில் மூன்று புதிய தொற்று மையங்களும் கண்டறியப்பட்டன.
புதிதாக தொற்றுக்கு உள்ளானவர்களைவிட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,405ஆக உயர்ந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. இதுவரை கோவிட் தொற்றிலிருந்து 40, 493பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.