
புத்ராஜெயா, ஆக 16 – சிவகங்கை மற்றும் உலு திராம் (Ulu Tiram) புதிய தொற்று மையங்களின் மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட கோவிட் 19 நோய்க்கிருமி மீதான ஆய்வில் அந்நோய்க்கிருமி, D614G எனும் புதிய வகைக்கு மாறுதலடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மலேசிய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சிகளில் இது கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கோவிட் 19 கிருமியில் இருந்து மாறுதலடைந்து உருவாகியுள்ள இப்புதிய வகையானது, மலேசியாவில் இருப்பது கண்டறியப் பட்டிருப்பதால், மக்கள் இன்னும் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும்.
அதோடு இப்புதிய வகையானது பத்து மடங்கு எளிதாக தொற்றக்கூடியதாகவும், பரவக்கூடியதாகவும் இருப்பதாக டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
இப்போதைக்கு இந்த சிவகங்கை மற்றும் உலு திராம் புதிய தொற்று மையம் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது.
சுகாதார அமைச்சும், சம்பந்தப்பட்ட இதர தரப்புகளும், இந்த கோவிட் 19 நோய்த்தொற்றைத் துடைத் தொழிப்பதில் தொடர்ந்து கடுமையாக முயன்று வருகின்றனர்.
என்றாலும் மக்களும், கூடல் இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், சுத்தம்-சுகாதாரத்தைப் பேணுதல் போன்ற நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வர வேண்டும் என டாக்டர் நோர் ஹிஷாம் வலியுறுத்தினார்.
இந்த கோவிட் 19 நோய்த்தொற்றையும் அதன் மாறுதலடையும் வகைகளையும் முற்றாக அழிப்பது என்பது, பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
எனவே சுயக் கட்டுப்பாட்டை முழுமையாகவும் உயர்மட்ட நிலையிலும் கடைப்பிடிக்கும்படி டாக்டர் நோர் ஹிஷாம் அறிவுறுத்தினார்.