Latestமலேசியா

கோவிட்-19: முகக் கவசங்களைச் சரியாக அணியுங்கள், சுகாதார நிபுணர் வலியுறுத்து!

கோலாலம்பூர், அக் 18 – கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்கும், புதிய தொற்று மையங்கள் உருவாகியிருப்பதற்கும், மக்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்காததே காரணம்.

மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் அறிவியல்-மருத்துவத் துறை பொது சுகாதார நிபுணர், இணைப் பேராசிரியர் டாக்டர் மலினா ஒஸ்மான் (Dr Malina Osman) அவ்வாறு கூறியிருக்கின்றார்.

இப்போதைக்கு இந்த கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ள, நோய்த் தடுப்பு விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிப்பது ஒன்று தான் வழி, அது தவிர வேறு வழியே இல்லை என டாக்டர் மலினா குறிப்பிட்டார்.

கோவிட்-19ன் முதல் அலை மற்றும் இரண்டாவது அலையோடு ஒப்பிடும் போது, தற்போது ஏற்பட்டிருக்கும் மூன்றாவது அலை, மிக எளிதாக அதிகமானோருக்குப் பரவக்கூடிய வகையில் உள்ளது.

எனவே இச்சூழ்நிலையை மக்கள் உணர வேண்டும். அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைக் கடைபிடிப்பதைத் தவிர, வேறெதுவும் நம்மால் செய்ய முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என டாக்டர் மலினா கூறினார்.

குறிப்பாக முகக் கவசம் அணிவது. பலர் மூக்கை விட்டு விட்டு, வாய்க்கு மட்டும் முகக் கவசம் அணிவதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதனால், மூக்கின் வழியாக நோய்க்கிருமிகள் உடலுக்குள் புக வாய்ப்புள்ளது. எனவே வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். அதையும் சரியாக அணிய வேண்டும். அதாவது மூக்கையும் வாயையும் மூடியபடி தான் முகக் கவசம் அணிய வேண்டும். அது தான் சரியான முறை என டாக்டர் மலினா தெரிவித்தார்.

சரியான முறையில் முகக் கவசம் அணிவதோடு, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற சுய சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கும்படியும் அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே கோவிட்-19 தொற்று மிக மோசமாகப் பரவியிருக்கும் சபா மாநிலத்தில் மக்களிடையே பரிசோதனைகளை அதிகரித்திருக்கும் சுகாதார அமைச்சின் நடவடிக்கையை அவர் பாராட்டினார்.

அம்மாநிலத்தில் குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுவதை உறுதிச் செய்யும் பொறுப்பு சமுதாயத் தலைவர்களுக்கு இருப்பதாக டாக்டர் மலினா மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!