Latestஉலகம்

சம்பள பாக்கி; முதலாளியின் கழுத்தைப் பேனா கத்தியால் கீறிய மலேசிய பெண்!

சிங்கப்பூர், அக் 23 – சிங்கப்பூரின் பயனியர் (Pioneer) மாவட்டத்தில் சம்பள பாக்கியைக் கேட்கப் போய், அது வாக்குவாதமாக மாறி பின்னர் அங்கு நிகழ்ந்த அசம்பாவிதத்தினால் மலேசிய பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த சம்பவத்தில் முறையான வேலை அனுமதியின்றி கிடங்கொன்றில் பாதுகாவலராக வேலை செய்து வந்த அப்பெண் தமது முதலாளியிடம் சம்பள பாக்கியைக் கேட்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது நிகழ்ந்த வாக்குவாதத்தில் 73 வயது முதலாளியான பன்னீர்செல்வம் ஆர் ராஜூ என்பவர், மல்லிகா முனியாண்டி எனும் அம்மலேசிய பெண்ணை பேனா கத்தியைக் கொண்டு மிரட்டியதோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டியிருக்கின்றார்.

அச்சமயத்தில் முதலாளி கையில் வைத்திருந்த பேனா கத்தியைப் பிடுங்கிய மல்லிகா, அவரது கழுத்தை அறுத்துக் காயப்படுத்தி விட்டு, பின்னர் மலேசியாவுக்குத் தப்பியோடியுள்ளார்.

மீண்டும் சிங்கப்பூர் திரும்ப முயன்ற மல்லிகாவை வூட்ஸ்லேண்ட் (Woodlands) சோதனைச் சாவடியில் போலீசார் கைது செய்தனர்.

தற்போது 33 வயதாகும் மல்லிகா, ஆயுதத்தைப் பயன்படுத்திக் காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் சிங்கப்பூரில் முறையான அனுமதி இல்லாமல் வேலை செய்து வந்த குற்றத்திற்காகவும், அவருக்கு எட்டு மாத சிறை மற்றும் மூவாயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.

அவர் தடுத்து வைக்கப்பட்ட நாளான கடந்தாண்டு டிசம்பர் ஆறாம் தேதியில் இருந்து அவரது தண்டனை காலம் அமுலுக்கு வருவதாக நீதிமன்றம் அறிவித்ததால், இன்னும் சில தினங்களில் மல்லிகா விடுதலையாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மல்லிகாவைப் பேனா கத்தியை வைத்து மிரட்டியது, சட்டவிரோதமாக அவரைப் பாதுகாவலராகப் பணியமர்த்தியது, விசாரணையின் போது போலீசாரிடம் பொய்யுரைத்தது ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக பன்னீர்செல்வம் அடுத்த மாதம் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!