Latestஉலகம்மலேசியா

சரவாக் தேர்தல்: கோவிட்-19 மருட்டலுக்கு மத்தியிலும் தேர்தல் நடத்தப்படும், தேதி இன்னும் உறுதியாகவில்லை!

கூச்சிங், அக் 23 – சரவாக் மாநில தேர்தலை நடத்துவதற்கான தேதியைத் தாம் தொடர்ந்து பரிசீலித்து வருவதாக சரவாக் முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி ஆபாங் ஜோஹாரி துன் ஒப்பேங் (Datuk Patinggi Abang Johari Tun Openg) தெரிவித்துள்ளார்.

சரவாக் சட்டமன்றம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் தாமாகக் கலைந்து விடும். அதற்குள் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தாம் இருப்பதாக ஆபாங் ஜோஹாரி கூறினார்.

கோவிட்-19 நோய்ப் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றாலும் சரவாக் மாநில தேர்தலை நடத்துவது என்ற முடிவில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பதே தெரியாத ஒரு சூழ்நிலையில் அனைவரும் இருக்கின்றோம். அதேசமயம், தேர்தலையும் நடத்தியாக வேண்டும்.

இருந்தாலும், சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பொறுத்து, சட்டமன்றத் தேர்தலைத் தொடருவதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தலும் முக்கியம், மக்களின் ஆரோக்கியமும் முக்கியம். ஆனால் ஆட்சிப் பொறுப்பு இல்லை என்றால், கோவிட்-19 நோய்த் தொற்றைத் துடைத் தொழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தங்களால் முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போய் விடும் என்பதையும் அவர் விளக்கினார்.

ஒருவேளை திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான SOP விதிமுறைகளை வகுக்கும் பொறுப்பை தாம் தேர்தல் ஆணையத்திடமே விட்டு விடுவதாகவும் ஆபாங் ஜோஹாரி கூறினார்.

சரவாக் சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும், எப்போது மாநிலத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது அவர் அவ்விளக்கங்களை வழங்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!