
நியுயோர்க், ஜன 13 – தனது முதன்மை நிறுவனமான பேஸ்பூக்-குடன் பயனர்களின் தரவுகள் பகிர்ந்துக் கொள்ளப்படும் எனும் வட்சாப்- பின் (WhatsApp) அறிவிப்பை அடுத்து, தகவல் அனுப்பும் சேவையை வழங்கும் சிக்னல் (Signal), டெலிகிராம் (Telegram ) ஆகிய இரு செயலிகளை, அதிகமானோர் பதிவிறக்கம் செய்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வாரம் மட்டும், 70 லட்சத்து 50 ஆயிரம் பேர் , ‘சிக்னல்’ செயலியைப் பதிவிறக்கம் செய்தனர். இது அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் 4, 200 விழுக்காடு உயர்வாகும்.
டெலிகிராம் செயலியை 90 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தனர். முந்தைய வாரத்தைக் காட்டிலும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 91 விழுக்காடு அதிகரித்தது. வட்சாப்பிற்கு போட்டியாக விளங்கும் அவ்விரு செயலிகளும், இந்தியாவிலேயே அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
மக்கள் மத்தியில் பிரபலமான, ஈலோன் மஸ்க் (Elon Musk) , எட்வர்ட் ஸ்னோவ்டன் (Edward Snowden )ஆகியோர் வட்சாப்பிற்குப் பதிலாக , சிக்னல் செயலி பாதுகாப்பானது என பொதுவில் பிரபலப்படுத்தியதை அடுத்து, ‘சிக்னல்’ மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கின்றது.