
ஜொகூர் பாரு , நவ 22 – சிங்கப்பூரில் மலேசியர்கள் சிலர் , சாலையோரங்களில் படுத்து, பொது கழிப்பறையில் குளித்து, பசியைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேலைக்குச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இதற்கு முன்பு அன்றாடம் ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணித்து வந்தவர்கள் எல்லைக் கட்டுப்பாடுகளினால், அக்குடியரசிலே தங்கும் முடிவை எடுத்திருக்கின்றனர்.
ஆனால், அக்குடியரசில் உயர்வான வாழ்க்கை செலவினத்தால் முறையாக தங்குவதற்கு இடமில்லாமல் சில மலேசியர்கள் உள்ளனர்.
குடும்பத்தைக் காப்பாற்ற , செலவுகளைக் குறைத்துக் கொள்வதற்காக, பொதுவிடங்களில் உள்ள நீண்ட இருக்கைகளில் ஓய்வெடுத்துக் கொள்வதோடு தூங்கவும் செய்கின்றனர்.
பொது கழிப்பறைகள், கடைகள் ,தொழுகையிடங்கள் அல்லது வேலையிடங்களில் குளித்துக் கொள்கின்றனர்.
எல்லைக் கட்டுப்பாடுகள், நிதி சுமை, முதலாளிமார்கள் விதித்திருக்கும் விதிமுறைகள் ஆகியவற்றின் காரணமாக, மலேசியர்கள் சிலர் , நாட்டிற்குத் திரும்பாமல் அக்குடியரசிலே தங்கும் முடிவை எடுத்திருக்கின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் மலேசியர்களின் நிலையை, சிங்கப்பூரில் பான தயாரிப்பு நிறுவனமொன்றில் வேலை செய்து வரும் 34 வயது ஷாரூடின் ஹயில் ஹில்மி , பெரித்தா ஹரியான் உள்நாட்டு ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.
800 ரிங்கிட் சிங்கப்பூர் டாலரிலிருந்து 1,400 சிங்கப்பூர் டாலர் வரை (RM2,441 -RM4,271) சராசரி மாத வருமானம் பெறுபவர்கள், மாதத்திற்கு 300 (RM915) சிங்கப்பூர் டாலரிலிருந்து 500 (RM915) சிங்கப்பூர் டாலர் வரையில் கட்டிலை வாடகைக்கு எடுக்க முடியாமல் உள்ளனர்.
அறையின் வாடகையோ மாதத்திற்கு 700 சிங்கப்பூர் டாலரிலிருந்து (RM2,135) 1,200 சிங்கப்பூர் டாலர் வரை (RM3,660) எட்டுகின்றது.
உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவு அதில் அடங்கவில்லை.
வீடற்றவர்கள் போன்ற வாழ்க்கையை வாழும் இவர்கள், இந்தளவிற்கு கஷ்டப்படுவதற்குப் பதிலாக , மலேசியாவிற்கு திரும்பி விடலாமென நீங்கள் கேட்கலாம்.
பாதிக்கப்பட்ட இவர்கள் பெரும்பாலும், குடும்ப வருவாய்-க்கான ஒரே ஆதாரமாக திகழ்பவர். மலேசியா திரும்பினால், கோவிட் பெருந்தொற்றினால் வேலை கிடைக்குமா என்ற அச்சத்திலும் இருப்பவர்கள். இதை விட சோகமானது, இங்கு இவர்கள் தங்குமிடமின்றி இருக்கும் தகவல் , அவர்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் இருப்பதாகும் !