
ஜோகூர் பாரு, டிச 8 – சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உதவும் நோக்கத்தில் சிங்கப்பூர் தொழிலாளர் பிரிவு ஒன்றை ஜோகூர் ம.இ.கா அமைந்துள்ளது. ஜோகூர் ம.இ.கா தலைவரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஆர். வித்யானந்தன் இதனை தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் பிரச்சனை அல்லது நெருக்கடியை எதிர்நோக்கினால் அவர்களுக்கு தேவையான உதவி வழங்கப்படும். குறிப்பாக இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்கு வருவதற்கான ஏற்பாடு, கோவிட் பரிசோதனை, தனித்திருப்பதற்கான கட்டண விவகாரம், மற்றும் எல்லை நடமாட்டம் தொடர்பான பிரச்சனையை எதிர்நோக்குவோருக்கு உதவும் வகையில் ஜோகூர் ம.இ.காவின் சிங்கப்பூர் தொழிலாளர் விவகாரப் பிரிவு செயல்படும்.
இதுதவிர சிங்கப்பூரில் பாதிக்கப்ட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான ஒருமுக சேவையும் ஏற்படுத்தப்படும்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல் நாங்கள் உதவிகளை வழங்கி வருகிறோம். இப்போது இந்த விவகாரங்களை கவனிப்பதற்கு ஒருவரை நியமித்திருக்கிறோம் என்றும் வித்யானந்தன் கூறினார். சிங்கப்பூர் வேலை இழந்த 740 இந்தியர்களுக்கு வேலை வாய்புக்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளையும் ஜோகூர் ம.இ.கா மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார். டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதிவரை வேலை வாய்ப்பு கண்காட்சியையும் ஜோகூர் ம.இ.கா ஏற்பாடு செய்யும். தொழிலாளர் பிரிவுக்கு தலைமையேற்றுள்ள எஸ். அருள்தாஸ் கடந்த மார்ச் முதல் வேலை வாய்ப்பு தொடர்பான 100 பிரச்சனைகளை கவனித்துள்ளார். எல்லை பயணம் மற்றும் தனிமைப்படுத்தும் விவகாரங்கள் குறித்து 013-7111798 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.