Latestமலேசியா

சிங்கையிலுள்ள மலேசியா தொழிலாளர்களை குறிவைத்து செயல்படும் வட்டி முதலைகள் – 8 பேர் கைது

ஜோகூர் பாரு, அக் 23- ஜோகூரிலுள்ள பெரும்பாலான சட்டவிரோத வட்டி முதலைகள் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மலேசிய தொழிலாளர்களை குறிவைத்துச் செயல்படுகின்றனர்.

நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளவர்களைக் சமூக வலைத்தளங்களில்  அடையாளம் கண்டு வங்கி சேமிப்பு எண்கள் உட்பட அவர்களது தகவல்களை தங்களுக்கு தெரிவிக்கும்படி அவர்களிடம் வட்டி முதலைகள் கேட்டுக்கொள்கின்றனர்.

வங்கிக் கணக்கின் எண்கள் கிடைத்தவுடன் கடன் பெறுவோரின் அனுமதியின்றி 400 முதல் 1,500 சிங்கப்பூர் டாலரை அவர்களது கணக்கில் பணத்தைச் செலுத்திவிடுவதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அயோப் கான் ( Ayob Khan ) மைடின் பிச்சை தெரிவித்தார்.

அதன் பின்னர் தான் வங்கியில் போடப்பட்ட  தொகைக்கு 15 முதல் 20 விழுக்காடுவரை வட்டி விகிதம் விதிக்கப்படுவதாகவும் ஒரு மாதத்தில் மூன்று முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை இந்த கடனைத் திரும்ப செலுத்துமாறு கடன் பெற்றவர்களிடம் நெருக்குதல் கொடுப்பதாக  அயோப் கான் தெரிவித்தார்.

செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதிவரை இந்த வட்டி முதலைக் கும்பலில் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதையும் அவர் கூறினார். மலாக்கா புக்கிட் பாரு டாலாமில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் ஆறு ஆடவர்களும் ஜோகூர் டங்கா பேயில் இதர இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பலிடமிருந்து 10 மடிக்கணினிகள் , 31 கைதொலைபேசிகள், 12 சிம் கார்டுகள் , 9 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் டோயாத்தா வெல் பயர் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதோடு இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அக்டோபர் 17ஆம் தேதிவரை சட்டவிரோத வட்டி முதலைகளில் 42 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அயோப் கான் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!