
சியோல், ஜன 11 -சுயமாக இயங்கும் மின்சாரக் கார்களைத் தயாரிக்க ஏப்பள் (Apple) நிறுவனம், தென் கொரியாவின் ஹுண்டாய் ( Hyundai ) நிறுவனத்துடன் ஒத்துழைக்கவுள்ளது.
அதன் தொடர்பான ஒப்பந்தந்தில் அவ்விரு நிறுவனங்களும் இவ்வாண்டு மார்ச்-சில் கையெழுத்திட திட்டமிடப்பட்டிருப்பதாக கொரிய IT News ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியை சுட்டிக் காட்டி , ராய்ட்டர்ஸ்( Reuters) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், அடுத்தாண்டு சுயமாக இயங்கும் ஏப்பளின் மின்சாரக் கார்கள் தயாரிப்புக்கு தயாராகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அக்கார்களின் பேரளவிலான தயாரிப்பு பணிகள் 2024 –ஆம் ஆண்டில் தொடங்கலாமெனவும் கூறப்படுகிறது. அந்த ஆண்டில் ஒரு லட்சம் கார்களைத் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹுண்டாய்-யின் துணை நிறுவனமான Kia Motors- சின் கார்கள் தயாரிக்கப்படும் ஜார்ஜியா தொழிற்சாலையில், ஏப்பளின் புதிய கார்கள் தயாரிக்கப்படலாம்.
ஏற்கனவே, சுயமாக இயங்கும் மின்சாரக் கார் தயாரிப்புச் சந்தையை, தெஸ்லா ( Tesla) நிறுவனம் ஆக்கிரமித்திருக்கின்றது. அந்த சந்தையில் தற்போது Apple – Hyundai கூட்டணி போட்டியாக இறங்கவுள்ளது.