Latestமலேசியா

செமினி ஆற்று நீர் மாசு : நீலாய் தொழிற்பேட்டை பகுதி கழிவுகள் காரணமா?

செப்பாங், அக் 5 – செமினி (Semenyih) ஆற்று நீர் துர்நாற்றம் வீசுவதற்கு, நெகிரி செம்பிலான், நீலாய் தொழிற்பேட்டை பகுதியில் இருந்து ஆற்றில் கலந்துள்ள கழிவுகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

நீர் மாசடைந்ததை அடுத்து, சுங்கை செமினி (Sungai Semenyih) மற்றும் புக்கிட் தம்போய் (Bukit Tampoi) நீர் சுத்திகரிப்பு ஆலைகள் நேற்று மாலை 4.30 மணியில் இருந்து செயல்படவில்லை.

நீலாய் தொழிற்பேட்டை பகுதிக்கு அருகே அமைந்துள்ள சுங்கை பாத்தாங் பெனார் (Sungai Batang Benar) ஆற்றில் இருந்து சுங்கை செமினி ஆற்றோடு கலக்கும் நீரில் தான் துர்நாற்றம் வீசுவது, தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக நீர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் (Datuk Seri Tuan Ibrahim Tuan Man) தெரிவித்தார்.

ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள வாடை போனால் மட்டுமே, நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீண்டும் செயல்பட முடியும்.

ஆனால் சுங்கை செமினி ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள துர்நாற்றம் நேற்றிரவு 9 மணியளவில் இன்னும் மோசமடைந்ததே தவிர குறையவில்லை என டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் கூறினார்.

நீர் மாசடையக் காரணமான தரப்பினர் மீது நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டிருப்பதால் பெட்டாலிங் (Petaling), உலு லங்காட் (Hulu Langat), கோல லங்காட் (Kuala Langat), செப்பாங் (Sepang) ஆகிய இடங்களில் நேற்று மாலையில் இருந்து அட்டவணையிடப்படாத தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!