
புத்ராஜெயா, ஜன 13 – அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட பிரிஹாத்தின் ( Prihatin ) உதவி நிதி, இம்மாதம் ஜனவரி 21-ஆம் தேதி முதல், B40 குறைந்த வருவாய் பெறும் பிரிவைச் சேர்ந்தவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
ஒரு கோடியே பத்து லட்சத்து ஆறாயிரம் பேர் அந்த உதவிநிதியைப் பெறத் தகுதி பெற்றிருப்பதாக நிதியமைச்சர் செனட்டர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ் ( Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz) தெரிவித்தார்.
இதனிடையே M40 நடுத்தர வருமானம் பெறும் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான, பிரிஹாத்தின் உதவிநிதி, ஜனவரி 25–ஆம் தேதி தகுதிபெற்றவர்களின் வங்கி கணக்குகளில் சேர்க்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்கள், பி.எஸ்.என் (BSN) வங்கி கிளைகளில் ரொக்கமாக உதவிநிதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வேளையில், சபா, சரவாக் மாநிலங்களில் வங்கி கணக்கை வைத்திருக்காதவர்கள், பிரிஹாத்தின் உதவி நிதியை, பிப்ரவரி தொடக்கம் முதல் ஏப்ரல் முதலாம் தேதி வரையில் அந்த தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். பணம் விநியோகிக்கப்படும் இடங்களுக்கான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென நிதியமைச்சர் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட பிரிஹாத்தின் உதவிநிதிக்காக அரசாங்கம் 718 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.