ஜனவரி 4 ஆம் தேதி முதல் 700 விளையாட்டாளர்கள் பயிற்சியில் ஈடுபடுவர்

கோலாலம்பூர், டிச 28 – எதிர்வரும் 4 ஆம் தேதி முதல் 700க்கும் மேற்பட்ட தேசிய விளையாட்டாளர்கள் மீண்டும் தேசிய பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் தனித்திருக்கும் அடிப்படையில் அவர்களது பயிற்சி இருக்காது.
எனினும் கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைத்து தேசிய விளையாட்டாளர்களும் எஸ் .ஒ.பி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேசிய விளையாட்டு மன்றத்தின் விளையாட்டாளர் பிரிவிக்கான இயக்குனர் ஜெப்ரி ஙாடிரின் (Jefri Ngadirin ) தெரிவித்தார். இந்த விளையாட்டாளர்கள் ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட முதல்நிலை விளையாட்டாளர்கள் மற்றும் நம்பிக்கை நட்சத்திர திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டாளர்களும் அடங்குவர் என அவர் கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ள இடங்களைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் அக்டோபர் மாதத்திலிருந்து தனித்திருக்கும் அடிப்படையிலான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முழுப் பயிற்சிக்கு தயாராகும் பொருட்டு அவர்களுக்கு வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 3 ஆம் தேதிவரை விடுமுறை வழங்கப்பட்டிருப்பதையும் ஜெப்ரி தெரிவித்தார்.
ஜனவரி 3 ஆம் தேதி பயிற்சி நிலையத்தில் அவர்கள் இணைந்தவுடன் அவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் அவர்கள் முழு பயிற்சியில் ஈடுபடுவார்கள் என அவர் சொன்னார். இதனிடையே அடுத்த ஆண்டு ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் மற்றும் சீ விளையாட்டுப் போட்டி நடைபெறுவதால் அந்த மூன்று போட்டிகளுக்கு தேசிய விளையாட்டாளர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பதையும் ஜெப்ரி வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு சுக்மா, காமான்வெல்த் விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேசிய விளையாட்டாளர்களை தங்களை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் மற்றும் செயல் திட்டங்களை தேசிய விளையாட்டு சங்கங்கள் வரையும் என்றும் ஜெப்ரி நம்பிக்கை தெரிவித்தார்.