
கோலாலம்பூர். நவ 26 – சீனாவில் ஜோ லோ எந்த இடத்தில் இருக்கிறார் என்ற தகவலை போலீஸ் கூறினால் அவரை கைது செய்வதற்கு தேவையான உதவிகளை வெளியுறவு அமைச்சு வழங்கும் என அதன் அமைச்சர் ஹிசாமுடின் உசேய்ன் கூறினார்.
எனினும் ஜோ லோ சீனாவில் இருக்கிறாரா என்பது தமக்கு தெரியாது என அவர் சொன்னார். அவரை மலேசியாவுக்கு கொண்டு வருவதில் வெளியுறவு அமைச்சு உதவ முடியாததற்கு எந்தவொரு காரணமும் இல்லையென அவர் விவரித்தார். நாடாளுமன்றத்தில் 2021ஆம் ஆண்டின் விநியோக சட்டம் தொடர்பான விவாதத்தை முடித்து வைத்து பேசிய போது ஹிசாமுடின் இதனை தெரிவித்தார்.
ஜோ லோ உண்மையிலேயே சீனாவில் இருக்கிறாரா இல்லையா என்று நமக்குத் தெரியாது. அவர் எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவலை அரச மலேசிய போலீஸ் படை தெரிவித்தால் வெளியுறவு அமைச்சு உதவுவதற்கு தயார் என ஹிசாமுடின் கூறினார்.
1 எம்.டி.பி நிதி மோசடியில் தமக்கு தொடர்பு இல்லை என்றால் ஜோ லோ எந்தவொரு பயமும் இல்லாமல் மலேசியா திரும்பலாம் என இதற்கு முன் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் கூறினார்.