
கோலாலம்பூர், நவ 26 –கூட்டரசு நெடுஞ்சாலையில், பொருள் ஒன்று குத்தி காற்று வெளியேறியிருந்த தனது வாகனத்தின் டயரை மாற்றிக் கொண்டு ,மீண்டும் வாகனத்தில் ஏறியபோது, ஆடவர் ஒருவர் வாகனத்தில் தான் வைத்திருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் திருடுப் போனதை உணர்ந்தார்.
அதன் தொடர்பில் அவர் பந்தாய் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
முன்னதாக அந்த ஆடவரும் அவரது மகனும் , பழைய கிள்ளான் சாலையில் உள்ள வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, தங்களை ஹோண்டா சிட்டி காரொன்று பின்தொடர்வதை உணர்ந்ததாக போலிசிடம் தெரிவித்ததாக, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அனுவார் ஒமார் கூறினார்.
அதைத் தொடர்ந்து, அந்த சந்தேகத்திற்குரிய வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை நேற்று பிற்பகல் பங்சார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
அந்த நடவடிக்கையின் போது , தேடப்பட்டு வந்த கார் கண்டுபிடிக்கப்பட்டதோடு, அந்த காரில் இருந்த இரு வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரும், 70 வயதான பெண்ணும் கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பிரிக்ஃபீல்ட்ஸில் இதே போன்ற மூன்று திருட்டு சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.