
வாஷிங்டன், ஜன 14 – அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் பதவி காலம் இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் வரலாற்றில் இரண்டாவது முறையாக அவருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பிற்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு முழுப் பொறுப்பேற்று டோனல்ட் டிரம்ப் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஜனநாயக கட்சியின் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இதனிடையே இணையத்தள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட Google நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. ஜோ பைடன் பதவியேற்பு, நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை, டோனல்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்யும் நடைமுறை தொடர்பான விளம்பரங்கள் இன்று முதல் இம்மாதம் 21 ஆம் தேதி வரை வெளியிடுவதற்கு Google நிறுவனம் தடைசெய்துள்ளது.