Latestமலேசியா

டோல் சாவடியில் போலீசாரின் பணிக்கு தடையாக இருந்த நால்வர் மீது குற்றச்சாட்டு

சிலிம் ரீவர், அக் 20 – சிலிம் ரீவர் டோல் சாவடிக்கு அருகே போலீஸ்காரரின் பணிக்கு தடையாக இருந்ததாக நான்கு ஆடவர்கள் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 32 வயது பி.பன்னீர் செல்வம் , 41 வயது எஸ்.விஜேந்திரன், 28 வயது எ.சிவகுமார், மற்றும் 25 வயது ஆர். துரைராஜ் ஆகியோர் மாஜிஸ்திரேட் நுருல் ஹிடயா முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

தேசிய மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது தங்களுக்கு மொழி புரியவில்லை என கூறியதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பொதுச் சேவைத்துறையின் ஊழியர் என்ற முறையில் கார்ப்பரல் முகமட் ஷாருல் அசுவான் அப்துல் மானாப் (Muhd Syahrul Azuwan Abd Manaf) தமது பணியை மேற்கொள்வதற்கு தடையாக இருந்ததோடு பல முறை எச்சரிக்கை விடுத்தும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாக அந்த நால்வர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்ததோடு தங்களது அடையாளக் கார்டையும் போலீசாரிடம் காண்பிக்க மறுத்தனர். இம்மாதம் 16ஆம்தேதி விடியற்காலை மணி 3.40 மணியளவில் சிலிம் ரீவர் டோல் சாவடிக்கு அருகே இக்குற்றத்தில் ஈடுபட்டதாக பன்னீர் செல்வம், விஜேந்திரன், சிவகுமார் மற்றும் துரைராஜ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

2 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும் தண்டனை சட்டத்தின் 186ஆவது விதியின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மூவாயிரம் ரிங்கிட் ஜாமினில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!