Latestமலேசியா

தனியார் மருத்துவமனை , கிளினிக்குகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 70% வரை குறைந்துள்ளது

பெட்டாலிங் ஜெயா, நவ 22 – கோவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால், மக்கள் உடல் நலக் குறைவுக்கு ஆளாகியிருப்பது குறைந்துள்ளது.

இதனால், தனியார் மருத்துவமனைகளையும்  கிளினிக்குகளையும்  நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை  70 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

மேலும், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டாலும், குறைந்த  கட்டணம் காரணமாக அரசாங்க மருத்துவமனைகளே மக்களின் தேர்வாக உள்ளது.

‘’அதிகமானோர் வீட்டிலியே இருக்கின்றனர். அடிக்கடி கைகளைக் கழுவுகின்றனர். முகக் கவசம் அணிகின்றனர். தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனர்.

இதனால் சாதாரணமாக ஒருவரைத் தாக்கும்  சளிக்காய்ச்சல் போன்ற பாதிப்பும் குறைந்துள்ளது ‘’ என மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் குல்ஜீட் சிங் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருப்பதாலும்,  மருத்துவ சுற்றுலா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துறையின் மூலமாக, 2018 –இல் 150 கோடி ரிங்கிட் வருமானம் ஈட்டப்பட்டதாக குல்ஜீட் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளின் சேவைகள் முடங்கியிருப்பதால்  அரசாங்க மருத்துவமனைகளை நாடி வரும்,  தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க, புத்ராஜெயா அனுமதிக்க வேண்டுமென  குல்ஜீட் பரிந்துரைத்தார்.

கோவிட் -19 தொற்று அல்லாத இதர நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும், அதிகம் சிக்கல் இல்லாத உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும், அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.

அவர்கள் தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சைப் பெற அரசாங்க மருத்துவமனைகள் அனுமதிக்க வேண்டும். அதுபோன்ற நோயாளிகளின் மருத்துவ கட்டணத்தை  அரசாங்கம் செலுத்தலாம். அதன் வழி அரசாங்க மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்கும் காலத்தைக் குறைக்க முடியுமென குல்ஜீட் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!