தாய்லாந்து பொது பேட்மிண்டன்; அதிரடி படைப்பதற்கு கிஷோனா உறுதி !

கோலாலம்பூர், ஜன 7- 2019ஆம் ஆண்டு சீ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதோடு கடந்த ஆண்டு ஆசிய மகளிர் குழு பேட்மிண்ட்ன் போட்யில் மலேசியா அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய எஸ். கிஷோனாவுக்கு இந்த புத்தாண்டில் தாய்லாந்து பொது விருது பேட்மிண்டன் போட்டியில் அதிரடி படைப்பதற்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
பேங்காக்கில் நடைபெறும் ஆசிய கட்ட போட்டியில் கலந்துகொள்ளவிருந்த மலேசியாவின் மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனையான சோனியா சியா மட்டுமே மகளிர் பிரிவில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்த போட்டியின்போது சோனியா சியாவுக்கு பயிற்சிக்கு துணையான ஆட்டக்காரராக கிஷோனா இடம் பெற்றிருந்தார்.
ஆனால், இப்போட்டியில் கலந்துகொள்ளவிருந்த தாய்லாந்து முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை நிச்வோன் ஜின்டாபோல் பயிற்சியின்போது காலில் காயம் அடைந்ததால் அவருக்கு பதில் இப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிஷோனாவிற்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வதற்கு கிஷோனா திட்டமிட்டுள்ளார்.
முதல் சுற்றில் கிஷோனா உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான தைவானின் தாய் சூ யிங்குடன் (Tai Tzu Ying) மோதவிருக்கிறார். இந்த ஆட்டத்தில் தாய் சூ யிங் தமக்கு கடும் மிரட்டலாக விளங்கினாலும் அவரை வீழ்த்துவதற்கு கடுமையாக பாடுபடப்போவதாக 22 வயதுடைய கிஷோனா தெரிவித்தார்.
தைவான் ஆட்டக்காரர் அனைத்துலக ரீதியில் பரவலான அனுபவத்தை பெற்றிருந்தாலும் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தப்போவதாக மலேசிய உபர் கிண்ண பேட்மிண்டன் குழுவில் இடம்பெற்றிருக்கும் கிஷோனா தெரிவித்தார்.