
கோலாலம்பூர், டிச 4 – தாய் அல்லது தந்தை மலேசியராக இருக்கும்போது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு அல்லது தத்தெடுக்கப்படும் குழந்தைக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோ கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டில், மலேசிய குடியுரிமையை வைத்திருக்கும் தாயிற்கும் அவரது வெளிநாட்டு கணவருக்கும் பிறக்கும் குழந்தைக்கு வழங்கப்படும் இரட்டை குடியுரிமையால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாமென, நேற்று மக்களவையில் உள்துறை துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் முகமட் சாயிட் கூறியிருந்தார்.
பெரும்பாலான வெளிநாடுகள், தந்தையைப் பின்பற்றியே குடியுரிமையை வழங்குகின்றன எனவும் , மலேசியா இரட்டை குடியுரிமை விவகாரத்தில் மிக கவனமுடன் இருக்க வேண்டுமென துணையமைச்சர் மேலும் கூறியிருந்தார்.
அதன் தொடர்பில் மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் துணையமைச்சரான ஹன்னா யோ கருத்துரைத்தார்.
எந்த தவறேதுமின்றி பிறக்கும் குழந்தைகள் எப்போதும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதில்லை; நாட்டின் பாதுகாப்புக்கு மருட்டலாக விளங்குவது அமலாக்கத் துறைகளில் காணப்படும் ஊழலே என ஹன்னா யோ குறிப்பிட்டார்.