
கொல்கத்தா, டிச 12 – “ தெ டர்ட்டி பிச்சர்” திரைப்படத்தில் நடித்த நடிகை ஆர்யா பானர்ஜி தனது படுக்கை அறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்பது பிரேத பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும் என கொல்கத்தா போலீசார் கூறினர்.
1996ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் மர்மம் நிறைந்த வாழ்க்கை இந்தியில் “ தெ டர்ட்டி பிச்சர்” என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை வித்யாபாலனுடன் துணைநாயகியாக நடித்து புகழ்பெற்றவர்தான் நடிகை ஆர்யா பானர்ஜி.
மும்பையில் மாடலிங் துறையிலும் பிரபலமாக இருந்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகையான ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். 33 வயதான ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள அடுக்கு மாடி வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் தனது வீட்டு வேலைக்கு மட்டுமே வேலைக்காரப் பெண்ணை வைத்திருந்தார்.
வழக்கம்போல் அந்த வேலைக்காரப் பெண் வீட்டு வேலை செய்வதற்காக ஆர்யா பானர்ஜி வீட்டிற்கு சென்றுள்ளார். பல முறை அழைப்பு மணி அடித்தும் ஆர்யா பானர்ஜி கதவை திறக்கவில்லை. அவரது செல்போனுக்கும் வேலைக்காரப் பெண் அழைத்தும் பதில் வரவில்லை. வேறு வழியின்றி அந்த பெண் போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் அந்த அடுக்குமாடி வீட்டிற்கு வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது தனது படுக்கை அறையில் ஆர்யா பானர்ஜி இறந்து கிடந்த்தைத் கண்டு போலீசார் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனை தொடர்ந்து ஆர்யா பானர்ஜியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.