
கோலாலம்பூர், ஜன 23- 1 எம்.டி.பி.யின் துணை நிறுவனமான எஸ்ஆர்.சி இண்டர்நேசனலுக்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நீதி நம்பிக்கை மோசடி உட்பட நான்கு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு 12 ஆண்டு சிறை மற்றும் 21 கோடி ரிங்கிட் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஷாலி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மார்ச் 1ஆம் தேதியிலிருந்து குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து சிவில் வழக்குகளுக்கான நீதிபதியாக முகமட் நஸ்லான் மாற்றப்பட்டுள்ளார். நீதிபதி முகமட் நஸ்லானை சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு மலாயா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ அஷார் முகமட் பணித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையை மலேசிய வழக்கறிஞர் மன்றம் தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த மாற்றல் உத்தரவு தொடர்பான அறிக்கையின் நகலை மலாயா தலைமை நீதிபதி அஷார் முகமட் மலேசிய வழக்கறிஞர் மன்றத்திற்கும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் வர்த்தக நீதிமன்றத்திலிருந்து குற்றவியல் நீதிமன்றத்திற்கு நஸ்லான் மாற்றப்பட்டார் . சிவில் நீத்திமன்றத்தின் ஒரு பகுதியாகவே வர்த்தக நீதிமன்றம் இருந்தது. இதனிடையே நீதிபதி நஸ்லான் முகமட் திடீரென சிவில் வழக்குப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சைட் இஸ்கந்தர் சைட் ஜபார் தெரிவித்தார்.
நீதிபதி முகமட் நஸ்லானின் மாற்றத்தில் நீதித்துறை உண்மையில் சுதந்திரமாக செயல்படுகிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில எழுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள சைட் இஸ்கந்தர் கூறினார். நஜீப் வழக்கில் தீர்ப்பளித்த ஒரு நீதிபதி மட்டுமே குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருப்பது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.