Latestஉலகம்மலேசியா

நாடு – உலகத் தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள் 

கோலாலம்பூர், ஜன 14 – விவசாயம் செழிக்க உதவிடும் இயற்கைக்கு நன்றி கூறி பொங்கலை வரவேற்றிருக்கும்  தமிழர்களுக்கு , நாட்டின் தலைவர்களும்,  உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
பொங்கும் மங்கலம்  எங்கும் நிறைந்து விளங்குமென தங்களது நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அவ்வகையில் பேரரசர்  தம்பதியரான அல் சுல்தான் அப்துல்லா  ரியாதுதீன் அல் முஸ்தாஃபா பில்லா ஷா –வும் ( Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah ), பேரரசியார்  துங்கு அஸிசா அமினா மய்மூனா இஸ்கண்டாரியா-வும் ( Tunku Azizah Aminah Maimunah Iskandariah  ) பொங்கல் திருநாள் , நல்ல வளத்தைக் கொண்டு வருமென , மக்களுக்கு  தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இவ்வேளையில், இம்முறை பலரை கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், குடும்பத்தினரின் பொங்கல் வைத்து கொண்டாடியிருக்கும் தமிழர்களுக்கு, பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்  தமது பொங்கல் வாழ்த்தினைக் கூறிக்  கொண்டார்.

சுகாதார  நெருக்கடியிலும், கட்டுப்பாடுகளுடன் மிதமான அளவிலே பொங்கலிட்டு மகிழ்ந்திருக்கும்  தமிழர்களுக்கு,  எதிர்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பொங்கல் வாழ்த்தினை பகிர்ந்துக் கொண்டார். பல்லின மக்களின் பல்வேறு கலாச்சாரங்களும் பண்பாடுகளும்  மதிக்கப்படும் இந்நாட்டில் , பொங்கல் அனைவருக்கும் பரீட்சியமான ஒரு கொண்டாட்டமாகவும் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், மலேசியாவைப் போன்றே,   உலகின் பல்வேறு நாடுகளில்  வசிக்கும் தமிழர்களுக்கும் தத்தம் நாடுகளின்  தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வகையில், பொங்கல் பேரளவில் கொண்டாடப்படும் இந்தியாவில்,  அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமது அதிகாரப்பூர்வ சமூக அகப்பக்கத்தில்,  பொங்கல் வாழ்த்தினை தமிழில் பதிவிட்டிருக்கின்றார்.   தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும்  பொங்கல் கொண்டாட்டம்,  மக்களுக்கு நல்ல உடல் நலத்தையும்  வெற்றிகளையும் கொண்டு வருமென தமது எதிர்பார்ப்பினை அவர்  வெளிப்படுத்தினார்.

இதனிடையே, பிரிட்டன் பிரதமர்  போரிஸ் ஜான்சன் (Boris Johnson), பிரிட்டன் வாழ்  தமிழர்களுக்கும், உலகம் முழுவதிலும் உள்ள  தமிழர்களுக்கும் காணொலியின் வாயிலாக  தமது இனிய பொங்கள் வாழ்த்தினைக் கூறிக் கொண்டிருக்கிறார்.

தமது வாழ்த்தில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து பிரிட்டனில்  வாழும்  தமிழர்கள், நாட்டின் பொருளாதாரத்தை உந்தச் செய்யவும்,  சிறார்களுக்கு கல்வி போதிக்கவும், தேசிய சுகாதார துறையில் நோயாளிகளிக்கு சிகிச்சையளித்து கவனித்துக் கொள்ளவும் முக்கிய பங்காற்றி வருவதற்காக  நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!