
கோலாலம்பூர், ஜன 13- நாடு முழுவதிலும் கோவிட் -19 தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த தொற்றுக்கு 2,985 பேர் உள்ளாகினர். இதன்வழி இதுவரை நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 144,518 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றின் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. சிலாங்கூரில் இன்று 837 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகினர் என சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
ஜோகூரில் 535 பேரும், சபாவில் 450 பேரும், கோலாலம்பூரில் 289 பேரும், சரவாக்கில் 166 பேரும் , பகாங்கில் 143 பேரும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். மேலும் பினாங்கில் 105 பேரும் , நெகிரி செம்பிலானில் 106 பேரும், கெடாவில் 97 பேரும் ,கிளந்தானில் 85 பேரும், மலாக்காவில் 72 பேரும், பேராவில் 61 பேரும் இந்த தொற்றுக்கு உள்ளாகினர்.
நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் 32,377 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் 197 பேர் சிகிச்சை பெற்றுவரும் வேளையில் 79 பேர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று குணமடைந்த 994 பேர் வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை 111,578 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இன்று கோவிட் தொற்றின் காரணமாக நால்வர் உயிரிழந்தனர். நாட்டில் கோவிட் தொற்று பரவியது முதல் இதுவரை 563 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆறு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் உட்பட இன்று 11 புதிய தொற்று மையங்களும் கண்டறியப்பட்டுள்ளன.