
சிரம்பான், செப் 1 – தனது சம்பளத் தொகையைச் சொந்தமாக மாற்றியது தொடர்பில் டெர்மாகா ஒயில்&காஸ் (Dermaga Oil & Gas) நிறுவனத்தின் நிதி நிர்வாகி ஒருவர் மீது சிரம்பான், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 11 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டுள்ளன.
சம்பளத்தை நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றியதாகவும் அந்த 37 வயது மாது மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
ஆயினும் அம்மாது தம்மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்து விசாரணை கோரியிருக்கின்றார்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து 2019 ஜனவரி வரை அவர் இக்குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நிறுவன இயக்குனருக்குத் தெரியாமல் அவர் தனது சம்பளத்தை நாலாயிரம் ரிங்கிட் அதிகரித்து, மாதச் சம்பளத்தை ஒன்பதாயிரம் ரிங்கிட்டில் இருந்து 13 ஆயிரம் ரிங்கிட்டுக்கு உயர்த்திக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப் பட்டது.
அம்மாது மீதான இந்நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் பட்டால் அவருக்குக் குறைந்தபட்சம் ஓராண்டில் இருந்து 14 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.