
கோலாலம்பூர், பிப் 23 –1, 200 மியன்மார் நாட்டவர்களை அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
மலேசிய அரசாங்கம், அவர்களைத் திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி, முன்னதாக இரு மனித உரிமை அமைப்புகள் மனு செய்திருந்தன.
அந்த மனுவை செவிமடுக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இணக்கம் தெரிவித்தது.
அதையடுத்து, மியன்மார் நாட்டவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை நாளை காலை மணி 10 வரை ஒத்தி வைக்கும் இடைக்கால உத்தரவை அந்த நீதிமன்றம் வெளியிட்டது.
Amnesty International Malaysia அமைப்பும், Asylum Access Malaysia அமைப்பும், மியன்மார் நாட்டவர்களைத் திருப்பி அனுப்பி வைப்பதை நிறுத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுவை சமர்பித்திருந்தனர்.
நாளை அந்த மனு செவிமடுக்கப்படுமென அவ்விரு அமைப்புகளையும் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் லிம் வெய் ஜியேட் ( Lim Wei Jiet) தெரிவித்தார்.
மியன்மார் ராணுவ அரசாங்கம் அனுப்பி வைத்திருக்கும் கப்பலின் மூலமாக, மியன்மார் நாட்டவர்கள், பேராக்–லுமுட் ராணுவ கடற்படை தளத்திலிருந்து இன்று அனுப்பி வைக்கப்படவிருந்தனர்.